புதுச்சேரி: நேஷ்னல் ஹெரால்ட் பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அமலாக்கத்துறை மூலம் சம்மன் அனுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இன்று(ஜூலை21) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், காங்கிரஸ் தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக்கோரியும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸார் இந்திரா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால் புதுச்சேரியில் இருந்து கடலூர் சென்னை செல்லும் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதனால் இவ்வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன.
அப்போது மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைத்தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகக்கூறி, பாஜக அரசை கண்டித்து கண்டனமுழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்ற அனுமதிகோரி உயர் நீதிமன்றக்கிளையில் மனு!