புதுச்சேரி: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், "புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி வந்த பிறகு நில அபகரிப்பு, வீடுகள் அபகரிப்பு, போலி பத்திரங்கள் தயார் செய்து அதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளை தொடர்ந்து அபகரிக்கும் வேலை நடந்துவருகிறது.
அரசியல்வாதிகளின் ஒத்துழைப்போடு ஒருசிலர் போலி பத்திரங்கள் தயாரிக்கும் வேலையைச் செய்திருக்கிறார்கள். ஃபிரான்ஸ் நாட்டில் வசிப்பவர்களின் வீடு, மனைகளைக் கண்டுபிடித்து, அதற்குப் போலியாக பத்திரம் தயார் செய்து போலி கையெழுத்திட்டு 20-க்கும் மேற்பட்ட பத்திரங்களைத் தயாரித்துள்ளனர். இதில் அரசியல்வாதிகளுக்கு வேண்டியவர்களும் உள்ளனர்.
சில வியாபாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். சில அரசியல்வாதிகளுக்கும் இதுபோன்ற பத்திரங்கள் தயார்செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான விசாரணையை காவல் துறை செய்துவருகிறது. கூட்டமாகச் சிலர் சேர்ந்து இந்த வேலையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் புகாரின் அடிப்படையில் 10 பத்திரங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் 10 பத்திரங்கள் தயார் செய்து 50 கோடி ரூபாய் சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளன.
போலி பத்திரங்கள், முத்திரைகள் தயாரித்தவர்கள், போலி கையெழுத்துப் போட்டவர்களின் பெயர்கள் எங்களிடம் உள்ளன. இதில் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற விவரமும் வந்துள்ளது. புதுச்சேரியில் பல கொலைகளைச் செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய நில அபகரிப்பு ஊழல்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதன் மூலம் உண் மையைக் கண்டறிந்து, சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முடியும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் வழக்கை சிபிஐ எடுத்து நடத்தக் கோரி நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுவேன்.
புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்துள்ளவர்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுவருகின்றன.
இதுபோன்ற நிறுவனங்களை முடக்க வேண்டும். பணத்தை இழந்த மக்களுக்கு அதனைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். புதுச்சேரியில் கடந்த மூன்று மாதமாக வெடிகுண்டு கலாசாரம் இருந்துவருகிறது.
கரோனா மூன்றாவது அலை வந்தால் புதுச்சேரி தாங்காது. தற்போது திரையரங்குகளைத் திறக்கவும், பார்களில் அமர்ந்து மது குடிக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் கரோனா பரவும் நிலை உருவாகியுள்ளது. இதனை முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி