தெலங்கானா மாநிலம் நால்கொண்டா மாவட்டத்தின் நாகர்ஜுனசாகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நரசிம்மையாவுக்குத் (64) திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
உடனே, அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இவர், அதிகாலை, 5.30 மணிக்கு காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோமுலா நரசிம்மையா 1956 ஜனவரி 9ஆம் தேதி நால்கொண்டா மாவட்டத்தில் உள்ள பாலெம் கிராமத்தில் பிறந்தார். இவர் 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பின்னர், இவர் 2013ஆம் ஆண்டு சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்தார். இதையடுத்து, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சி சார்பாக நாகர்ஜுனசாகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இவரது மறைவுக்கு, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.