கேரளா உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8, 10, 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலை எதிர்கொண்டனர்.
மூன்று கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் 78.64 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. ஆறு மாநகராட்சிகள், எட்டு நகராட்சிகள், 14 மாவட்ட ஊராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ட்விட்டர் பக்கத்தில், "உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பிரதிநிதியை தேர்ந்தெடுத்த கேரள மக்களுக்கு நன்றி. இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளின் ஊழல், வகுப்புவாதம் மற்றும் பாசாங்குத்தனமான அரசியலை நாங்கள் வெளிப்படுத்துவோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
பாஜக மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தாலும், மாநிலத்தில் முன்பைவிட நல்ல முன்னேற்றத்தை அடைந்து இருந்த காரணத்தால் கட்சியின் மூத்தத் தலைவர்கள் சற்று நிம்மதியாக உள்ளனர். கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.