கர்நாடகா மாநிலம் மைசூரு வெளிவட்டச் சாலைச் சந்திப்பிற்கு அருகே கடந்த திங்களன்று (மார்ச் 22) போக்குவரத்துக் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை, காவலர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது, பைக்கின் ஹேண்டிலில் லத்தி சிக்கியதில், அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில், பைக் ஓட்டிவந்த தேவராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்து கோபமடைந்த மக்கள், அங்கிருந்த போக்குவரத்துக் காவலரைச் சுற்றிவளைத்துத் தாக்கினர். இதில், இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் வாகன ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் காவல் துறை வாகனமும் சேதமடைந்தது.
இந்நிலையில், தேவராஜுடன் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த சுரேஷின் வாக்குமூலம் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், "காவலர்கள் எங்களை நிறுத்தவில்லை. தேவராஜ்தான் பைக்கின் வேகத்தைக் குறைத்தார். அப்போது, பின்னால் வந்த லாரி இடித்ததில்தான் விபத்து ஏற்பட்டது. நாங்கள் கீழே விழுந்தது மட்டும்தான் ஞாபகம் உள்ளது. இந்த விபத்திற்கும் காவல் துறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: துபாய்க்கு 1.03 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் கடத்த முயன்றவர் கைது!