போஜ்பூர்: பீகாரில் துப்பாக்கிகளுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று வங்கியில் புகுந்து கொள்ளை அடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் நவாடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிரா பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் இன்று (டிச.06) காலை 10.17 மணிக்கு துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று நுழைந்தது.
அந்த மர்ம கும்பல் வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ஊழியர்களை சிறைபிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது தொழிலதிபர் ஒருவர் வங்கியில் டெபாசிட் டெய்வதற்காக கொண்டு வந்து கேஷ் கவுண்டரில் இருந்த ரூ.16 லட்சத்தை அந்த கும்பல் கொள்ளையடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து பேசிய போஜ்பூர் காவல் கண்காணிப்பாளர் பிரமோத் குமார், “ஐந்து பேர் வங்கிக்குள் நுழைந்துள்ளனர். அதன் பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் 2 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் ரூ.16 லட்சத்தை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அவர்கள் வங்கியின் கதவை மூடி வைத்திருந்ததால் கொள்ளையர்கள் உள்ளே உள்ளனரா அல்லது தப்பிச் சென்று விட்டனரா என குழப்பம் ஏற்பட்டது. பின்னர் மர்ம நபர்கள் ஏற்கனவே பணத்தை எடுத்து தப்பிச் சென்றது தெரியவந்தது. வங்கியில் புகுந்த மர்ம நபர்கள் அனைவரும் சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளில் பதிவாகி உள்ளனர். நகரை சுற்றி போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். விரைவில் மர்ம நபர்கள் கைது செய்யப்பட்டு பணம் மீட்கப்படும்” எனத் தெரிவித்தார்.
5 மர்ம நபர்கள் வங்கியில் புகுந்து கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் கூறும் நிலையில், ஏழு முதல் எட்டு பேர் வங்கிக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக வங்கி ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய வங்கி ஊழியர், “ஏழு முதல் எட்டு மர்ம நபர்கள் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் அனைவரிடமும் துப்பாக்கி இருந்தன. அவர்கள் பணத்தை எடுத்துச் செல்லும் முன், எங்கள் செல்போன்களை எடுத்துக்கொண்டு எங்களை உள்ளே வைத்து பூட்டினர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் வங்கிக்குள் துப்பாக்கிச் சூடு ஏதும் நடத்தவில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடரும் ஆழ்துளை கிணறு மரணங்கள்! மத்திய பிரதேசத்தில் சிதைந்த பிஞ்சு குழந்தையின் கனவு!