கோழிக்கோடு: ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதுக்கும் மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, சிறப்பு காவல் படையும் அமைக்கப்பட்டது.
இதனிடையே தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி போலீசார் தாக்கியதில், கோமா நிலைக்குச்சென்ற இளம்பெண் மாஷா அமினி(22) கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.
இதனால், ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளித்தனர். கட்டாய ஹிஜாப் சட்டத்தைக் கண்டித்தும், ஈரான் அரசைக் கண்டித்தும் பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரபலங்கள் பலர், தங்களது முடியை வெட்டியும், ஹிஜாபை எரித்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஈரானின் ஹிஜாப் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கேரளாவில் சுதந்திர இஸ்லாமிய சிந்தனையாளர்கள் அமைப்பைச்சேர்ந்த இஸ்லாமியப்பெண்கள் தங்கள் ஹிஜாபை எரித்துப்போராட்டத்தில் ஈடுபட்டனர். கோழிக்கோடு டவுன் ஹால் அருகே நடந்த இந்தப்போராட்டத்தில் ஏராளமான இஸ்லாமியப்பெண்கள் கலந்து கொண்டனர். கேரளாவில் போராட்டத்தில் ஹிஜாபை எரிப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.