வாரணாசி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தல்தான் அங்குள்ள பல கட்சிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கிறது. இதனால்தான், ஆளும் பாஜகவே அனைத்து தரப்பிலான வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளது. சமாஜ்வாதி கட்சியும் தான் வெற்றிப்பெற வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் சாதி, மத காரணிகளை கணக்கிட்டு வேட்பாளர்களையும், கூட்டணியையும் அமைத்துவருகிறது.
கவனிக்கப்பட வேண்டிய வெற்றி
இதற்கிடையில், பல தொகுதிகள் பாஜகவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக உள்ளன. அதில் ஒன்று, பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள வாரணாசி தெற்கு சட்டப்பேரவை தொகுதி. இந்தத் தொகுதியில் பாஜக ஓரிரு முறை அல்ல, எட்டு முறை வெற்றி பெற்றுள்ளது.
தற்போது, அத்தொகுதியில் எம்எல்ஏவான நீல்காந்த திவாரி, மாநில தொண்டு விவகாரம் மற்றும் சுற்றுலா அமைச்சராக உள்ளார். ஆனால், இவருக்கு முன் ஷ்யாம்தேவ் ராய் சௌத்ரி என்பவர் ஏழு முறை வாரணாசி தெற்கு தொகுதியை வென்றுள்ளார்.
இந்தத் தொகுதியை பொறுத்தவரை, குறிப்பிட சமூகம் அல்லது இந்துக்களை விட இஸ்லாமிய வாக்காளர்களே அதிகம். அப்படியிருந்தும், பாஜக இந்தத் தொகுதியை மொத்தம் எட்டு முறை வென்றது கவனிக்க வேண்டியது. பாஜகவின் இந்த வெற்றி அரசியல் மற்றும் தேர்தல் காரணிகளுக்கு அப்பாற்பட்டது என்றே கூறவேண்டும்.
1989 - 2017: காவிகளின் கோட்டை
வாரணாசி தெற்கு தொகுதி, பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்குவதற்கு முக்கிய காரணம் ஷ்யாம்தேவ் ராய் சௌத்ரி என்ற கூற வேண்டும். 1989 முதல் 2012 வரை தொடர்ந்து பாஜகவிற்கு வெற்றி வாங்க தந்த இவருக்கு, கடந்த தேர்தலில் ஓய்வளிக்கப்பட்டு மருத்துவர் நீல்காந்த் திவாரிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்த தொகுதியின் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால், உத்தரப் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சர் சம்பூரணானந்தா, ஆட்சியைக் கைப்பற்றிய போது இங்குதான் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவருக்கு பின், இங்கு காங்கிரஸ், இடதுசாரிகள் தங்களின் பலத்தை நிரூபித்து வந்தாலும், வலதுசாரிகளின் கைகளே எப்போதும் ஓங்கியிருந்தன.
முக்கியமாக, இந்தத் தொகுதியை சாதி வாரியாக கணக்கிட்டு பார்த்தால் புதிய தகவலை நமக்கு அளிக்கும். வாரணாசி தெற்கு தொகுதியில் மொத்தம் 3.16 லட்சம் வாக்களார்களில், 1.74 லட்சம் ஆண்களும், 1.42 லட்சம் பெண்களும், 31 மூன்றாம் பாலினத்தவர்களும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பிராமணர் - இஸ்லாமியர் வாக்கு வங்கி
இங்கு பிராமணர்-இஸ்லாமியர் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும். வாக்களார் எண்ணிக்கைபடி, பிராமணர்கள் 8 விழுக்காடாகவும், இஸ்லாமியர்கள் 13 விழுக்காடாகவும் உள்ளனர். வாரணாசி தெற்கு தொகுதியில் உள்ள பகுதிகளான தால்மண்டி, ஹதா, ராஜ தர்வாஸா, மதன்பூர், சோனர்பூர் ஆகியவை இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி. பிராமணர்களும் இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஏனென்றால், பிராமண வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
பிரமாணர்கள் தவிர்த்து, சத்திரியர்கள் (6 விழுக்காடு), வைசிரியர்கள் (8 விழுக்காடு) வெற்றிக்கு பங்காற்றி வருகின்றனர். இந்தத் தேர்தலில், முன்னேறிய வகுப்பு - பிற்படுத்தப்பட்ட வகுப்பு என அரசியல் களம் இருந்து வந்தாலும், வாரணாசி தொகுதி என்பது முன்னேறிய வகுப்பினரின் தொகுதியாகவே கருதப்படுகிறது.
சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற 1951ஆம் ஆண்டு தேர்தலில், சம்பூர்ணானந்தா (முதல் முதலமைச்சர்) இங்கு போட்டியிட்டார். பின்னர், 1957ஆம் ஆண்டும் போட்டியிட்டார். சுதந்திரத்திற்கு பின் 1951 முதல் 1967 வரை வாரணாசி தெற்கு தொகுதி காங்கிரஸின் கைக்குள்தான் இருந்தது.
ஆனால், 1969-1974 வரையிலான காலகட்டங்களில் இங்கு ஜன சங்கம் வேர்விட தொடங்கிவிட்டது. இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் ருஸ்டம் (Rustam) இங்கிருந்தான் தேர்வுசெய்யப்பட்டார்.
திரிணாமுல் பக்கம் திரும்புமா தெற்கு...?
தற்போதைய நிலவரம் குறித்து பார்த்தோமானால், பாஜக இங்கு பிராமண முகத்தை முன்னிறுத்துகிறது. தற்போதைய எம்எல்ஏ நீல்காந்த் திவாரியைதான் வேட்பாளராக அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், சமாஜ்வாதியோ இங்கு போட்டியிடலாமா வேண்டாமா என ஆலோசித்து வருகிறது. ஒருவேளை இந்த தொகுதி சமாஜ்வாதி கூட்டணியில் உள்ள திரிணாமுல் கட்சியின் கைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. ஏனேன்றால், இந்த தொகுதியில் வங்காளிகள் வாக்குகள் பரவலாக உள்ளது.
இந்தத் தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்த கமலாபதி திரிபாதியின் குடும்பத்தில் இருந்து ஒருவரை வேட்பாளராக நிறுத்த திரிணாமுல் விருப்பப்படுகிறது.
அதன் பேச்சுவார்த்தையும் முழுவேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்க, இதுதொடர்பாக மம்தா பானர்ஜியும் வாரணாசி வருகை தர உள்ளார்.
வெற்றி யாருக்கு?
இந்தத் தொகுதியில் இருந்து சமாஜ்வாதி பின்வாங்கி, திரிணாமுல் கொடுக்கும்பட்சத்தில், வங்காளி பிராமணர் மற்றும் இஸ்லாமியர்கள் கூட்டணி மூலம் பிராமண வேட்பாளரை இங்கு போட்டியிட வைத்து, தொகுதியை கைப்பற்ற திரிணாமுல் துடிக்கிறது.
இந்தத் தேர்தலிலும், வாரணாசி தெற்கு தொகுதி மிக முக்கிய தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் இந்த தொகுதியை கைப்பற்றுவதன் மூலம் தங்கள் மேல் வீசப்படும் அத்தனை மதவாத கருத்துகளையும் அடித்து நொறுக்க பாஜக காத்துக்கொண்டிருக்கிறது.
ஒன்பதாவது முறையாக பாஜக இத்தொகுதியை கைப்பற்றுமா அல்லது திரிணாமுல் இங்கு த்ரில் வெற்றிபெறுமா என்பதே அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.