ஹைதராபாத்: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது. இதனிடையை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இஸ்லாமிய இளைஞர் முகமது சித்திக், விநாயகர் சிலைக்கு பிரதிஷ்டை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மத கலவரங்கள் அரங்கேறிவரும் இந்த நேரத்தில், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முகமது சித்திக் கூறுகையில், “நான் இஸ்லாமியனாக இருந்தாலும், அனைத்து மதங்களையும் மதிப்பேன். பொதுவாக இந்து மதத்தில் நிறைய கொண்டாட்டங்கள் உண்டு. அதனை அனைவருடனும் இணைந்து கொண்டாட விருபுகிறேன். அதில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மிகவும் விரும்புகிறேன். சிறுவயதில் இருந்தே எனது இந்து நண்பர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதை பார்த்து, அவர்களுடன் கலந்துக்கொள்வேன்.
18 ஆண்டுகளாக நானே விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறேன். மக்களை மதரீதியாக பிரித்து பார்ப்பதை நான் விரும்பவில்லை. அனைத்து மக்களும் ஒன்றே என்று நான் நம்புகிறேன். எல்லா மதத்திலும், கடவுள்கள் வேறே தவிர, சக்தி ஒன்றுதான். அந்த சக்திக்கு மட்டும் கீழ்படிவது நமது கடமை என்று எண்ணுகிறேன். எனது நண்பர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். அவர்கள் என்னுடன் பள்ளிவாசலுக்கு வருவார்கள். நான் அவர்களுடன் கோயிலுக்குச் செல்வேன். பூமியில் சில காலமே வசிக்க போகிறோம், அதுவரை மதரீதியாக சண்டை போடாமல், அனைவரும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்று தெரிவித்தார்.