கொச்சி: கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியினர் இடையே இரகசிய புனிதமற்ற உறவு இருப்பதாக பாஜக மூத்தத் தலைவர் வி. முரளிதரன் விமர்சித்துள்ளார்.
வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான வி. முரளிதரன் கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கேரளத்தில் ஆளும் கட்சி 5 ஆண்டும், எதிர்க்கட்சியில் உள்ள கூட்டணி அடுத்த 5 ஆண்டும் என கொள்ளையடிக்கிறது. இதுதான் கேரள அரசியலின் நிலை. ஆக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் இடையே இரகசியமான புனிதமற்ற உறவு உள்ளது.
இதைத்தான் பிரதமர் நரேந்திர மோடியும் சுட்டிக்காட்டியுள்ளார். பாலக்காட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை நினைவுக் கூர்கிறேன். மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளும், காங்கிரஸும் கைகோர்த்து தேர்தலை சந்திக்கின்றன. டெல்லியிலும் இருவருக்கும் இடையே உறவு உள்ளது. இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இடதுசாரிகள் தொடர்ந்து ஆதரவளித்தனர்.
ஆனால் தேர்தல் நேரத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்துவார்கள். நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் வாக்குறுதிக்கு மேல் வாக்குறுதிகளை அளித்துவருகிறது. ஆனால், எதையும் நிறைவேற்றியது கிடையாது. ஹரிபி ஹட்டோ (வறுமையை ஒழிப்போம்) என்று முழக்கமிட்டனர், எதுவும் நடக்கவில்லை.
ராஜிவ் காந்தி இடைத்தரகர்களை ஒழிப்பேன் என்றார், அதையும் நிறைவேற்றவில்லை. தற்போது தாய், அண்ணன், தங்கை என வாக்குறுதி தொடர்ச்சியாக வாக்குறுதி அளித்துவருகின்றனர். மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் எதையும் அவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள். அன்று சில துண்டு வெள்ளிக்கு ஆசைப்பட்டு யூதாஸ், இயேசுவை காட்டிக்கொடுத்தார்.
இன்று இடதுசாரிகள் சில துண்டு தங்கத்துக்கு ஆசைப்பட்டு கேரள மக்களின் முதுகில் குத்துகிறார்கள்” என்றார். பாலக்காட்டில் நேற்று பரப்புரை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கேரளத்தில் நடைபெற்றுவரும் அரசியல் கொலைகள் குறித்தும் பேசினார். தமிழ்நாட்டைப் போன்று கேரளத்தில் வருகிற 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
140 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட கேரளத்தில் வெற்றி பெறப்போவது யார் என்பது மே2ஆம் தேதி மதியத்துக்குள் தெரியவந்துவிடும்.
இதையும் படிங்க: நாங்கள் என்ன பாஜகவா? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்- ராகுல் காந்தி