மலப்புரம் (கேரளா): கேரள மாநிலத்தைச்சேர்ந்த மஞ்சேரி நகராட்சி கவுன்சிலராக இருப்பவர், அப்துல் ஜலீல் (52). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு 10 மணியளவில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, பையநாடு என்ற இடத்தில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் கவுன்சிலரை பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த கவுன்சிலர், பெரிந்தல்மன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சைப் பெற்று வந்த நிலையில், புதன்கிழமை மாலை 6 மணியளவில் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து மஞ்சேரி காவல் துறையினர் கூறுகையில், சம்பவத்தன்று கவுன்சிலர் மற்றும் மூன்று நண்பர்கள் உணவு உண்பதற்காக இன்னோவா காரில் ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு சிலரிடம் கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்னை காரணமாக, கவுன்சிலர் காரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த கும்பல் பையநாடு என்ற இடத்தில் வழிமறித்து நான்கு பேரையும் பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாகத் தெரியவருகிறது.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அப்துல் மஜீத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்றொரு நபரான ஷுஹைப் (Shuhaib) என்பவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேசத்தில் சூபி பாடகருக்கு வலைவீச்சு