நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மும்பை காவல் துறையினரால் ஜூலை 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாக காவல் துறை தரப்பில் முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. அவருடைய செல்போனை ஆய்வு செய்ததில், ஆபாச படம் விற்பனை செய்ததற்கான பணப் பரிமாற்றங்களுக்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ராஜ் குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டியிடம் அவரது வீட்டிற்கு சென்று காவல் துறையினர் சோதனையும் விசாரணையும் மேற்கொண்டனர். கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் இந்த விசாரணை நடைபெற்றது.
அப்போது ராஜ் குந்த்ராவுக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றும், அவர் அப்பாவி என்றும் ஷில்பா ஷெட்டி விசாரணையில் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ராஜ் குந்த்ரா, ரியான் தோர்பே ஆகியோரை ஜூலை 27ஆம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது நேற்றோடு முடிவடைந்த நிலையில், மேலும் மூன்று நாள்களுக்கு இந்தக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராஜ் குந்த்ரா, ரியான் தோர்பே இருவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது, இன்று (ஜூலை.28) விசாரணைக்கு வந்த நிலையில், இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி நீதிபதி மனுவை நிராகரித்தார்.
இதையும் படிங்க: ராஜ் குந்த்ரா அப்பாவி: ஷில்பா ஷெட்டியின் வாக்குமூலம்