மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் விராட் கோலியைத் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதி, மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் வசித்து வருகின்றனர்.
அனுஷ்கா சர்மா சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த 2012 -13 மற்றும் 2013 - 14 காலகட்டத்தில் பல்வேறு விழாக்கள் உள்பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மற்றும் நிகழ்ச்சி பதிப்புரிமைகளில் வருவாய் ஈட்டியதற்கு விற்பனை வரித்துறை கூடுதலாக வரி விதித்ததாகவும், அதை ரத்து செய்யக் கோரியும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து விருது நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பதிப்புரிமை பெற்றது தொடர்பாக 2012 - 13ஆம் ஆண்டில் 1 கோடியே 20 லட்சம் ரூபாயும்; தொடர்ந்து 2013 - 14ஆம் ஆண்டில் 1 கோடியே 60 லட்சம் ரூபாயாக அது அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வரி ஆலோசகரிடம் ஆலோசனை செய்த அனுஷ்கா சர்மா, தனது தரப்பில் 2 முறை மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுக்களை விசாரித்த நீதிபதிகள், வரி ஆலோசகர் மூலம் மனு தாக்கல் செய்ய சட்டத்தில் இடம் உள்ளதா என்றும், மனுக்களை நேரடியாக தாக்கல் செய்யாதது ஏன் என்றும் கடிந்து கொண்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து அனுஷ்கா சர்மா சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது. இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் விற்பனை வரித் துறை நோட்டீஸ் தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு பிப்ரவரி 6-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: Joshimath: ஹோட்டல்கள் இடிப்பு.. மத்திய அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட ஆலோசனை