மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் விண்னை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது. மலாட் பகுதியில் உள்ள குடிசை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்பா படா பகுதியில் உள்ள அனந்த் நகரில் நண்பகல் வேளையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அங்குள்ள குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. ஒரு வீட்டில் இருந்து அருகில் இருந்த வீடுகளுக்கு மெல்ல பரவிய தீ காட்டுத் தீ போல் நகரையை சூறையாடியது. இந்த கோர தீ விபத்தில் ஏறத்தாழ ஆயிரம் குடிசைகள் எரிந்து சேதமாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் பச்சிளம் குழந்தை இந்த தீ விபத்தில் உடல் கருகி இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்ணுக்கு முன் தாங்கள் வசித்த வீடு கொளுந்து விட்டு எரிவதை கண்டு மக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகையை கக்கிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுடன், பொது மக்கள் கடும் போராட்டம் நடத்தினர்.
மற்ற வீடுகளுக்கும் தீ பரவிய நிலையில், அங்கிருந்த சிலிண்டர்களும் வெடித்து சிதறியதால் பயங்கர தீ விபத்தாக மாறியதாக மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்தனர். எரிந்து கொண்டு இருந்த வீடுகளில் இருந்து பொருட்களை மீட்கும் முயற்சியில் பொது மக்கள் ஈடுபட்டனர். வீட்டு உபயோக பொருட்களுடன் தீ எரியும் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
இந்த தீ விபத்தில் 17 சிலிண்டர்கள் வரை வெடித்து சிதறியதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். கோர தீ விபத்தில் வீடுகளை இழந்த மக்கள் அகதிகள் போல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பிரஹன் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தீ விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தூரத்தில் நெருக்கம் நெருக்கமாக ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டதே இந்த தீ விபத்து பரவக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
மேலும், முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவுகள் வழங்கவும், இடம் நெருக்கடி ஏற்படுமின் வேறு இடங்களில் பொது மக்கள் தங்க வைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 3 ஆம் தேதி டெல்லியில் இதே போல் கோர தீ விபத்து நடந்தது. சுல்தான்புரி சாலையில் உள்ள குடிசைகளில் பற்றிய தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
அந்த சம்பவம் ஆறாத வடுவாய் மாறிய நிலையில், அந்த வடு மறைவதற்குள் மற்றொரு சம்பவம் நிகழ்ந்து கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!