மும்பை: மும்பை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. மழை காரணமாக மும்பை, தானே, நவிமும்பை, பல்ஹர் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதோடு, கால்வாய்களிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சியோன், செம்பூர், காந்தி மார்க்கெட், அந்தேரி மார்க்கெட், ஆர்சிஎப் காலனி, எல்பிஎஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை ரத்து
மும்பையில் சியோன் ரயில்வே நிலைய ரயில் பாதை உள்ளிட்ட முக்கிய ரயில் பாதைகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால், தாதர், பரேல், மாட்டுங்கா, குர்லா, சியோன் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மும்பையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுவர் இடிந்து 25 பேர் உயிரிழப்பு
இந்நிலையில், கனமழைக்கு காரணமாக செம்பூர் பாரத் நகரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மைத் துறையினர் அறிவித்துள்ளனர்.
அதிகாலை 1 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், விக்ரோலி பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் குடியிருப்பு பகுதியின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாண்டூப் எனும் புறநகர்ப் பகுதியில் வனத்துறை அலுவலகத்தின் சுவர் இடிந்து 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
நிவாரணம் அறிவித்த பிரதமர்
இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ள மோடி, "செம்பூர் மற்றும் மும்பையின் விக்ரோலியில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிர் இழப்பு ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஓய்வு பெற்ற போலீஸ் மீது வழக்குப்பதிவு... தன்னை ஏமாற்றியதாக மனைவி புகார்