அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளில் தற்போது குரங்கு அம்மை தீவிரமாக பரவி வருவதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதுவரை 11 நாடுகளில் 80க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவில் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஸ்வீடன், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐரோப்பிய நாடுகளில் இருந்து அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்பியவர்களுக்கும் இந்த தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதாக கூறப்படுகிறது.
குரங்கு அம்மை: சென்ற 1958 ஆம் ஆண்டுகளில் சோதனைக் கூடங்களில் ஆய்விற்காக வைத்திருந்த குரங்குகளின் இந்த வைரஸ், முதலில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னாளில் 1970ஆம் ஆண்டு மனிதர்களிடையே இந்த தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸ் விலங்குகளின் காயங்களில் இருந்தும், அதன் தொற்று உண்டான இடங்களில் இருந்தும் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் தகவல் படி, இந்த வைரஸ் பெரியம்மை ரக வைரஸ் எனவும், இதன் அறிகுறிகளாக கணுக்களில் வீக்கம்,காய்ச்சல், தலைவலி, முதுகுவலி, மற்றும் மிகுந்த சோர்வு ஆகியவையாகும்.
குரங்கு அம்மை எனப்படும் Monkeypox நேரடியாக பரவுவது குறைவு என்றாலும், இத்தொற்று மிக கடுமையானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த தொற்றின் தீவிரம் அதிகரிக்கும் போது மரணம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் இந்த தொற்றை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சீனாவில் ஓடுபாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்