டெல்லி : முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்கிவைப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “கேரளத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இதனால் 50 லட்சம் உயிர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஏஎம் கன்வில்கர், சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இது உயிர்களோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அனைவரும் தீவிரமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும். ஒருவரின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படும் முன் அனைவரும் தீவிரமாக செயல்பட வேண்டும். நீங்கள் விவாதம் செய்யக்கூடிய அரசியல் களம் இதுவல்ல” என்றனர்.
தொடர்ந்து கேரள சார்பில் ஆஜரான வழக்குரைஞர், “அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை பற்றி குறிப்பிடுகையில், 2018 ஆகஸ்டில் மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி, நீர்மட்டத்தை 139 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது” என்றார்.
இதற்கிடையில், வியாழக்கிழமை (அக்.21) காலை 9 மணியளவில் நீர்மட்டம் 137.2 அடியாக உள்ளதாக தமிழ்நாடு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு, “சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களையும் அவசர அடிப்படையில் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். அணையில் பராமரிக்கப்பட வேண்டிய அதிகபட்ச நீர்மட்டம் குறித்து குழு உறுதியான முடிவை எடுக்க வேண்டும்” என்று கூறியது.
மேலும், “மற்ற கட்சிகளின் கவலையை புரிந்து கொள்ளுங்கள். சிலர் அதை மறுக்கலாம், சிலர் அந்த வாதத்தை தொடரலாம், ஆனால் இதில் உள்ள ஆபத்து காரணிகளை மனதில் கொண்டு அதிகபட்ச அளவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை குழு முடிவு செய்ய வேண்டும்” என்றும் அமர்வு குறிப்பிட்டது.
தொடர்ந்து, “நீர்மட்டத்தை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்றும், இது குறித்து குழு தான் முடிவு எடுக்க வேண்டும். அனைத்து தரப்பினரின் கவலைகளையும் குழு ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்குள் உடனடியாக தீர்க்க வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கு அக்.27 (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ``கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழையால் வெள்ளம், நிலச்சரிவால் பெரிய அளவில் பொருள் இழப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையே அக்டோபர் 18-ம் தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.45 அடியை எட்டியது.
ஆகவே விரைவில் அணை 142 அடியை எட்டும் நிலை இருக்கிறது. எனவே, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும். மேலும், முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறக்கப்படுவதை 24 மணி நேரத்துக்கு முன்பாகத் தெரிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: 5 மாநிலத் தேர்தல்.. காய்நகர்த்தும் காங்கிரஸ்.. சோனியா தலைமையில் ஆலோசனை!