பீர்கூர்: தெலங்கானா மாநிலம், பீர்கூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (செப்.2) திடீரென ஆய்வு செய்தார். ரேஷன் கடையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். ரேஷன்கடை பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது, ரேஷன் கடையில் இருந்த பேனரில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் இல்லை? என மாவட்ட ஆட்சியர் ஜிதேஷிடம் கேட்டார்.
"நீங்கள் 35 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு வழங்குகிறீர்கள். அந்த 35 ரூபாயில், 30 ரூபாயை மத்திய அரசு செலுத்துகிறது. போக்குவரத்து செலவையும் மத்திய அரசே ஏற்கிறது. ஆனால், நீங்கள் ரேஷன் அரிசியை மாநில அரசே மக்களுக்கு வழங்குவது போல கூறிக் கொள்கிறீர்கள்" என்று மாவட்ட ஆட்சியரிடம் கோபமாக தெரிவித்தார்.
உடனடியாக பிரதமர் மோடியின் பேனரை வைக்க வேண்டும், இல்லையென்றால் தங்களது கட்சியினர் வைப்பார்கள் என்று மாவட்ட ஆட்சியரை எச்சரித்தார்.
இதையும் படிங்க: "வளர்ந்த இந்தியாவை உருவாக்க, நாட்டின் உற்பத்தித் துறையை மேம்படுத்துவது மிக அவசியம்"