விதிஷா: மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் புனித ஜோசப் பள்ளி என்னும் கிறிஸ்தவப் பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களை மதமாற்றும் பணியில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுவதாக பஜ்ரங் தல், விஷ்வ இந்து பரிஷத் போன்ற இந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டின.
இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மேற்கூறிய அமைப்புகள் புனித ஜோசப் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. நேற்று (டிசம்பர் 6) பள்ளி மீது தாக்குதல் நடந்தபோது, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
மாணவர்கள் அதிர்ச்சி
தாக்குதலை அடுத்து, தேர்வு ரத்துசெய்யப்பட்டு மாணவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். தாக்குதல் தொடங்கியதுடன் தரைதளத்திலிருந்து மாணவர்களையும் வேறு இடத்திற்கு நிர்வாகம் கொண்டுசென்றுள்ளது. இந்தத் தாக்குதலால் மாணவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தாக்குதல் ஓய்ந்த பின்னர், மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
பள்ளி மீதான தாக்குதல் குறித்து, விஷ்வ இந்து பரிஷத் தலைவர் நிலேஷ் அகர்வால் கூறுகையில், "தற்போது, பள்ளி அமைந்துள்ள இடம் கன்ஞ் பசோடா நகரைச் சேர்ந்த ராஜேஷ் மாத்தூர் என்பவரால் மருத்துவமனை கட்டுவதற்காக தானம் அளிக்கப்பட்ட நிலம். ஆனால், மருத்துவமனைக்குப் பதிலாக, வணிக நலன் சார்ந்த தனியார் பள்ளி இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி, மாணவர்களிடம் அதிகப் பணம் வசூலித்துவருகிறது.
சம்பவம் குறித்து விசாரணை
முக்கியமாக, இந்தப் பள்ளியில் பயிலும் எட்டு மாணவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியுள்ளனர். மாநில முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இந்தப் பிரச்சினை குறித்து விசாரித்து, பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து கன்ஞ் பசோடா வட்டார உயர் அலுவலர், ரோஷன் ராய் பள்ளிக்கு விரைந்துள்ளார். மேலும், பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் மதமாற்றம் நடைபெறுவதாக தன்னிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது எனவும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாகலாந்து துப்பாக்கிச்சூடு விவகாரத்தைக் கையிலெடுத்த மனித உரிமைகள் ஆணையம்