டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடத்த திட்டமிடப்பட்டன. ஆனால் கூட்டம் தொடங்கிய நாள் முதல் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம், கச்சா எண்ணெய் விலை உயர்வு என பல பிரச்சினைகள் குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டுவந்தனர்.
இதனால் கூட்டத்தொடர் நிறைவடைய இரண்டு நாள்கள் மீதமிருந்த நிலையில், மக்களவையும், மாநிலங்களவையும் நேற்று (ஆக. 11) முடித்துக்கொள்ளப்பட்டன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட முன்னணி எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்திலிருந்து விஜய் சௌக் நோக்கி பேரணி மேற்கொண்டனர். அப்போது பேரணியில் ஈடுபட்டிருந்த திமுக எம்பி திருச்சி சிவா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
இத்தகைய சம்பவத்தை பார்த்ததில்லை
அப்போது அவர், “ எனது 20 ஆண்டுக்கால நாடாளுமன்ற அனுபவத்தில் இத்தகைய சம்பவத்தை பார்த்ததில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை குறித்து ஒன்றியஅரசு பதிலளிக்கவில்லை. இதுவே நாடாளுமன்ற முடக்கத்திற்கு பாஜகவே காரணம். எந்த விவாதமும் இல்லாமல் 35 மசோதாக்களை ஆளுங்கட்சி நிறைவேற்றி உள்ளது. எதிர்க்கட்சி எம்பிக்கள் இரண்டு பேர் கீழே இழுத்து தள்ளப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அரசின் சர்வாதிகார போக்கை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. நாடாளுமன்றம் செயல்படாததற்கு ஆளுங்கட்சியே காரணம். அதேபோல் அவைக்காவலர்கள் குண்டர்கள் போல் செயல்படுகின்றன” எனத் தெரிவித்தார்.