ஷாதோல்: மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவி பள்ளிக்கு அழுக்கான சீருடையில் சென்றுள்ளார். அதைக் கண்ட ஆசிரியர் ஒருவர், மாணவியின் சீருடையை கழற்றி, அதை தானே துவைத்து, காய வைத்துள்ளார். அந்த சீருடை காயும் வரை சில மணி நேரத்திற்கு சிறுமி அரை நிர்வாணமாக நின்றுள்ளார். அதன்பின் சீருடை காய்ந்ததும், அதை அணியச் சொல்லி வகுப்புக்குள் அனுமதித்தார்.
அதோடு அவர் துணி துவைப்பதை புகைப்படமாக எடுத்துகொண்டும், தான் தூய்மையை கடைபிடிப்பவர் என்று தற்பெருமை பேசிக் கொண்டும், அந்த புகைப்படத்தை பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வந்தனா வைத்யா தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜிபி முத்து கதறல்... டிடிஎப் வாசன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு...