மும்பை : மகாராஷ்டிர அரசியலில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சிவசேனா பிரச்சினையில் இன்று (ஜன. 10) தீர்வு காணப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து உண்மையான சிவசேனாவை மகாராஷ்டிர சட்டப் பேரவையில் சபாநாயகர் ராகுல் நர்வேகர் அறிவித்தார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவே உண்மையான சிவசேனா என அவர் உத்தரவிட்டார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் 16 எம்.எல்.ஏக்களை பதவி செல்லுபடியாகும் என சபாநாயகர் ராகுல் நர்வேகர் அறிவித்தது உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரும் வரை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு யாரும் ஆட்டம் காட்ட முடியாது எனக் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அணியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார். சட்டப்பேரவை சபாநாயகரின் உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இது அவரது முடிவு அல்ல, டெல்லியின் உள்ள பாஜக தலைமை எடுத்த முடிவு என்றும் அவர் கூறினார்.
சபாநாயகரின் உத்தரவு சதித் திட்டத்தின் முன்வடிவு என்றும் அதை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பாலாசாகேப் தாக்ரே உருவாக்கிய சிவசேனா கட்சியை உடைக்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும் சஞ்சய் ராவத் குறிப்பிட்டார். அதேபோல் இந்த விவகாரத்தில் தனது அதிருப்தியை தெரிவித்து உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்ரே இந்திய உச்ச நீதிமன்றத்தை நாடி நீதியை நிலைநாட்ட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : ஏக்நாத் ஷிண்டே அணிக்கு அதிகாரம்! உத்தவ் தாக்ரேவுக்கு பின்னடைவு! மகாரஷ்டிராவில் என்ன நிலவரம்?