மத்தியப் பிரதேசம் மாநிலம் மான்பூர், பஹாவாலி கிராமங்களைச் சேர்ந்த பலருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், இதுவரை 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விசாரணையில், அவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததன் விளைவாக, உடல்நலக் குறைவு ஏற்பட்டது உறுதியானது. இதற்கு அப்பகுதியில் பணியில் உள்ள காவல் துறையின் அலட்சியம்தான் காரணம் என எழுந்த புகாரையடுத்து, கலால் அலுவலர், இரண்டு காவல் ஆய்வாளர்கள் முதல்கட்டமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உயர்மட்ட அலுவலர்களுடன் நடத்திய கூட்டத்தில், மோரேனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுராக் சுஜானியா, மாவட்ட ஆட்சியர் அனுராக் வர்மா ஆகியோரை பணியிட மாற்றம் செய்திட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய முதலமைச்சர், "கள்ளச்சாராயம் குடித்ததால் 18 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இத்தகைய சம்பவங்களை அரசு பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது. விசாரணையில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போலி மதுபானங்கள் விற்கப்படுவதை தீவிரமாக கண்காணித்து தடுத்திட வேண்டும். மாநிலத்தில் போலி மதுபானங்களுக்கு எதிராக ஒரு பரப்புரையைத் தொடங்க உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.