போபால்: குவாலியர், ஹஸிரா காய்கறிச் சந்தையைப் பார்வையிட மத்திய அமைச்சர் பிரத்யும் சிங் தோமர், இன்று (ஜனவரி 14) சென்றிருந்தார். போக்குவரத்துப் பிரச்சினையைச் சரிசெய்யும் வகையில் INTUC திடலுக்கு காய்கறிச் சந்தை மாற்றம்செய்யப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, அங்குள்ள வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிய பிரத்யும் சிங் தோமர் சென்றிருந்தார். அங்கே, பபினா பாய் என்கிற காய்கறி விற்கும் பெண்மணி ஒருவர் மத்திய அமைச்சரிடம், தான் ஒரு கைம்பெண் என்றும், காய்கறிகளை விற்பனை செய்து அதில் ஈட்டும் வருமானத்தில்தான் வாழ்ந்துவருவதாகவும் கூறினார்.
மேலும், இங்கிருந்த கடைகளை அப்புறப்படுத்தும்போது தன்னுடைய காய்கறி கடையையும் சேர்த்து அலுவலர்கள் அப்புறப்படுத்தியதாக தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தினார்.
இதனைக் கேட்ட பிரத்யும் சிங் தோமர், அப்பெண்மணியின் பாதங்களைத் தொட்டு, “நான் உங்கள் மகன் போன்றவன். ஒரு மகன் தவறிழைத்தால் அவனைக் கண்டிக்கும் உரிமை தாய்க்கு உள்ளது” எனக் கூறி அப்பெண்ணின் கைகளைப் பற்றி தன் கன்னங்களில் அடிக்க முற்பட்டார்.
அப்போது அந்தப் பெண்மணி தன் கைகளை விலக்கிக்கொண்டார். மத்திய அமைச்சரின் இச்செயல் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
இதையும் படிங்க: மயக்கமடைந்த மூதாட்டி: டாக்டராக மாறிய ஆளுநர் அடடே!