பீகார்: அர்வால் மாவட்டத்தில் நந்தகுமார் என்ற இளைஞர் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது, அப்பெண் அடித்து விரட்டியடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அப்பெண்ணுடன் இருந்த அவரது 7 வயது மகளுடன் சேர்த்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்த தாய், மகள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பராசி காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளச்சாராயம் விற்றதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞரின் மனைவி மற்றும் 7 வயது மகள் தனியாக வீட்டில் இருந்தனர். இவர்களின் தனிமையை அறிந்த நந்தகுமார் நேற்று (நவ.28) இரவு அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
இருப்பினும் அப்பெண் சுதாரித்து நந்தகுமாரை தாக்கி வெளியில் தள்ளி வீட்டின் கதவை பூட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த நந்தகுமார் அவரது வீட்டிற்கு சென்று பெட்ரோல் கேனை எடுத்து வந்து தாய் மற்றும் மகள் இருவர் மீதும் ஊற்றி, வீட்டின் கூரை மீதும் ஊற்றியுள்ளார்.
வீட்டின் கதவை வெளிபக்கமாக பூட்டி தீ வைத்து எரித்துள்ளார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக இருவரும் பாட்னா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:முஸ்லீம்னா தீவிரவாதியா? - பேராசிரியரிடம் கேள்வி எழுப்பிய மாணவன்!