டெல்லி: Rise of Covid-19 Cases in Delhi: தலைநகர் டெல்லியில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகமாகி வரும் சூழலில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று (ஜனவரி 2) காணொலிக் காட்சி மூலமாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "டெல்லியில் டிசம்பர் 31ஆம் தேதி 2 ஆயிரமாக இருந்த கரோனா தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை, ஜனவரி 1ஆம் தேதி 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
ஆனால், மருத்துவமனை படுக்கைகளின் இருப்பில் எந்தப் பிரச்னையும் இல்லை. டிசம்பர் 29இல் 262 படுக்கைகள் நிரம்பியிருந்த நிலையில், நேற்று (ஜனவரி 1) 270 படுக்கைகள்தான் நிரம்பியிருந்தன" என்றார்.
இரண்டாம் அலையின்போது ஏற்பட்ட தொற்று பாதிப்புகள், மருத்துவமனை படுக்கைகள் இருப்பு ஆகியவற்றின் தரவுகளையும் தற்போதைய தரவுகளையும் ஒப்பிட்டு முதலமைச்சர் விளக்கமளித்தார்.
சுய தனிமைப்படுத்துதல் போதும்
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதியின்படி, டெல்லியில் 6 ஆயிரத்து 600 பேருக்குத் தொற்று ஏற்பட்டு, 1,150 ஆக்ஸிஜன் இருக்கைகள் நிரம்பியிருந்தன.
மேலும், 145 பேர் அப்போது வெண்டிலேட்டரில் இருந்த நிலையில், தற்போது ஐந்து பேர் மட்டும் வெண்டிலேட்டரில் இருக்கின்றனர்.
டெல்லியில் கரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை. தற்போது, டெல்லியில் 6 ஆயிரத்து 360 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், இன்று (ஜனவரி 2) மட்டும் சுமார் 3 ஆயிரத்து 100 பேருக்குத் தொற்று கண்டறியப்பட வாய்ப்புள்ளது.
பெரும்பாலும், தொற்றாளர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறி மட்டுமே தென்படுகிறது. எனவே, லேசான அறிகுறிகள் இருப்போர் மருத்துவமனைக்கு வர வேண்டாம். அவர்கள் சுய தனிமைப்படுத்துதலில் இருந்தால்போதும்" என்றார்.