ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். லக்கிம்பூர் வன்முறை விவகாரம் தொடர்பான சர்ச்சையில் அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா சிக்கியுள்ள நிலையில், இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடைபெற்ற தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் அஜய் குமாரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும், லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது ஆஷிஷ் குமார் தனது காரை ஏற்றி தாக்குதல் நடத்தியதாகவும் விவசாயிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
ஆனால் சம்பவயிடத்தில் தனது மகன் இல்லவே இல்லை, அனைத்து விதமான விசாரணைக்கும் ஒத்துழைக்க தனது மகன் தயாராகவுள்ளதாக அமைச்சர் அஜய் குமார் கூறியுள்ளார்.
ஆஷிஷ் குமாரை கைது செய்ய வேண்டும், இந்த வன்முறைக்கு தார்மீகப் பொறுப்பேற்று அஜய் குமார் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.
இந்த பின்னணியில்தான் அமைச்சர் அமித் ஷாவை அஜய் குமார் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது அரை மணிநேரம் நீடித்தது. லக்கிம்பூர் விவகாரம் குறித்து நிச்சயம் பேசப்பட்டிருக்கும் எனவும் அதேவேளை ராஜினாமா முடிவு தொடர்பான பேச்சு இடம்பெற்றிருக்காது என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 2021 வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற இருவர்