பாட்னா: பிகாரில் டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. மாநில தலைநகரான பாட்னாவில் அதிகபட்சமாக 91 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பிகாரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கைகள் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து, டெங்குவை தடுப்பதற்காக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொசு மருந்து உள்ளிட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பயன்படுத்தப்படாத பொருள்கள் இருக்கும் இடங்கள், தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகள் ஆராயப்பட்டு, அங்கு மருந்துகள் தெளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்: பகல்பூரில் உள்ள ஜேஎல்என் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 115 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாட்னாவில் உள்ள நான்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மொத்தம் 62 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிஎம்சிஹெச் மருத்துவமனையில் 16 பேர், ஐஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் 16 பேர், எய்ம்ஸ்-இல் 20 பேர், என்ஹெசிஹெ-ல் 10 பேர் என மாநிலத்தின் 12 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 3 ஆயிரத்து 99 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தமாக 2 ஆயிரத்து 824 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. மேலும், ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பாகல்பூர், சிவன், ஜமுய், அவுரங்காபாத், சரண் மற்றும் முங்கர் ஆகிய மாவட்டங்களில் டெங்குவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 53 நோயாளிகள் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம்: சுகாதாரத் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணைந்து டெங்கு பாதித்த பகுதிகளில் ஃபோகிங் மற்றும் லார்வா தடுப்பு மருந்து தெளிக்க சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. பாட்னாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் வீடுகளுக்கு அருகில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற வேண்டும் என மூத்த மருத்துவர் மனோஜ் குமார் சின்ஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களது உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க, பாதிக்கப்பட்டவர் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கு உதவும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். முழுக்கை ஆடைகளை அணிந்து, தூங்கும்போது கொசுவலை பயன்படுத்துவது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ரத்த வங்கிகளுக்கு அறிவுரை: டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரத்த வங்கிகளிலும் போதுமான அளவு ரத்த சேமிப்புகளை இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு, சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பாட்னாவில் டெங்கு கட்டுப்பாட்டு அறையும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புற்று நோயாளிகள் தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன?.. ஆய்வில் வெளியான தகவல்.!