குஜராத்(அகமதாபாத்): சபர்மதி ஆற்றின் மேல் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்பட்ட அடல் பாலத்தில் நடமாடும் நபர்களின் எண்ணிக்கையை ஒரு மணி நேரத்திற்கு 3,000 பேர் என குறைக்க அகமதாபாத் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. சமீபத்தில் நடந்த பேரிடர் சம்பவமான மோர்பி பாலம் இடிந்த விபத்தின் எதிரொலியாக இந்த நடவடிக்கையை அகமதாபாத் நிர்வாகம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் 300 மீட்டர் நீலமும் 14 மீட்டர் அகலமும் கொண்ட இந்த அடல் பாலம் ஒரு பக்கம் பூந்தோட்டத்தையும், மறு பக்கம் வரவிருக்கும் கலை மற்றும் கலாசார மையத்தை இணைக்கிறது. இந்த பாலத்தை கடந்த ஆக.27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததிலிருந்து இது பெரும்பான்மையான மக்களைக் கவர்ந்து வந்தது.
இதுகுறித்து சபர்மதி நதிக்கரை வளர்ச்சி மாநகாரட்சி, “இந்த அடல் பாலம் 12,000 மக்களை சுமக்கும் அளவிற்கு வலுவான பாலமாக இருப்பினும், சமீபத்தில் நடந்த மோர்பி பாலம் விபத்திற்குள்ளானதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக இந்த பாலத்தின் மக்கள் வருகையை குறைத்துள்ளோம். அந்த வகையிலே பாலத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை ஒரு மணி நேரத்திற்கு 3,000 பேர் என குறைக்கப்பட்டுள்ளது.
அதைத் தாண்டி யாரையும் பாலத்தைக் காண அனுமதிக்க முடியாது. மீதமுள்ளவர்கள் தங்களின் வாய்ப்பு வரும் வரை நதிக்கரையில் காத்திருக்க வேண்டும்” என கடந்த திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்டது. வண்ண 'LED' ஒளிஅமைப்புகளுடன் சுமார் 2,600 டன்கள் இரும்பு ராடுகளால் இந்த பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.115.50 குறைந்தது..