பஞ்சாப்: பஞ்சாபி மொழிப் பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து முசேவாலா கடந்த மே 29ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சித்துவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை பஞ்சாப் அரசு திரும்பப்பெற்ற 24 மணி நேரத்திற்குள் இச்சம்பவம் நடந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்புடைய இரண்டு நபர்களை கடந்த வாரம் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சௌரப் மகாகல் என்பவர் நேற்று(ஜூன் 8) கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சித்து முசேவாலா கொலை தொடர்பாக மேலும் சில இளைஞர்களை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். சிபிஐ அளித்த தகவலின்படி, மொஹாலியில் உள்ள க்ளைமேட் டவர் பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில், இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சில வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.