சண்டிகர்: ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத்தில் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்புடைய இரண்டு நபர்களை மோகா காவல்துறையினர் இன்று(ஜூன் 3) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பாடகர் சித்து மூஸ்வாலா கொலை செய்யப்பட்டதையடுத்து, நகரின் பல்வேறு இடங்களில் காவல்துறையின் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கொலை தொடர்பாக பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் பொலிரோ வாகனம், அதில் இளைஞர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்று லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் பவன் பிஷ்னோய் மற்றும் நசீப் ஆகியோரை மோகா காவல்துறையினர் வேறு வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்தது. இருப்பினும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாபி மொழி பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா கொலைக்கு பின்னணியில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் டெல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கொலையில் தனக்கு தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விடைபெற்றார் பாடகர் சித்து மூஸ்வாலா