கர்நாடக மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கிடையே கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களின் பதவிகள் ஏலத்தில் விடப்படுவதாகவும், கூடுதல் விலையைக் கொடுப்பவர் பஞ்சாயத்துத் தலைவர்களாக நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல் பரவியது. இது தொடர்பான வீடியோக்களும், வெளியானது.
பெல்லாரி மாவட்டம் குருகோடு தாலுகா சிண்டிகேரி கிராம பஞ்சாயத்தின் எல்லைக்குட்பட்ட பைலூரு கிராமத்தில் தான் இந்த ஏலம் நடைபெற்றுள்ளது.
கிராமத்தில் உள்ள மரம்மா கோயிலுக்கு முன்னால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டம் நடத்தினர். அப்போது, கிராம பஞ்சாயத்தில் மொத்தம் 26 இடங்களுக்கு தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.5.7 லட்சம் வரை ஏலத்தில் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் ரூ.51 லட்சத்து 20 ஆயிரம் செலவில் ஏலம் முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு ஏலம் எடுத்த நபருக்கு மட்டுமே இந்த கிராம மக்கள் ஓட்டுப் போட வேண்டும்.
இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் ரூ.51 லட்சம் கிராமத்திலுள்ள கோயில் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும். அதனால் இந்த பதவிகளை ஏலம் எடுத்தவர்கள் தவிரக் கிராமத்திலிருந்து வேறுயாரும் தேர்தலில் நிற்கக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் ஜனநாயக ரீதியாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்று நினைத்த இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விரக்தி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட பஞ்சாயத்துத் தலைமை நிர்வாக அலுவலர் நந்தினிக்கு தெரியவர இதுகுறித்து குருகோடு தஹ்சில்தார் ராகவேந்திரா ராவிடம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையில் கிராம மக்கள் தேர்தலின்றி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர். இந்த பணத்தைக் கிராமத்தில் கோயில் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்
இது தொடர்பாக ஈடிவி பாரத் உடன் பேசிய குருகோடு தஹ்சில்தார் ராகவேந்திர ராவ், இந்தச் சம்பவம் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு குழு ஒன்று பைலூரு கிராமத்திற்கு சென்றுள்ளது. வீடியோவில் உள்ளவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளாட்சி பதவிகளை ஏலத்தில் எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்ததுள்ளது.
இருப்பினும் இந்த எச்சரிக்கையை மீறி பல இடங்களில் உள்ளாட்சி பதவிகளுக்கான இடங்களை ஏலத்தில் விடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதேபோல மாவட்டத்தில் மேலும் ஒரு சில கிராமங்களிலும் உள்ளாட்சி பதவிகளுக்கு லட்சக்கணக்கில் ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டு ரகசிய கூட்டங்கள் நடந்து வருகின்றன.