டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்தப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 90 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த நாடாளுமன்ற கட்டடத்திற்குப் பதிலாக புதிய கட்டடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போதைய கட்டடத்தின் அருகில் மத்திய விஸ்டா மறுமேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்தக் கட்டடம் கட்டப்படுகிறது.
இதன் கட்டுமானப் பணிக்கான ஏலம் கடந்த மாதம் நடந்தது. இதில் ரூ.861.90 கோடிக்கு கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தை டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டுமானப் பணிகள் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் தேசிய தலைநகரில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்திற்கான வடிவமைப்பு போட்டியில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து படைப்பாற்றல் மிக்கவர்களை நாங்கள் அழைக்கிறோம் என்று வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகத்தின் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா கூறியுள்ளார்.
சிறந்த வடிவமைப்பாக தேர்வு செய்யப்படும் வெற்றியாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சிறந்த வடிவமைப்புகளுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டு விருதுகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உட்கட்சி பிரச்னைகளை பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது " - கபில் சிபல்