நர்மதா (குஜராத்): நாட்டின் பல்வேறு பகுதிகளை கேவடியாவோடு இணைக்கும் எட்டு ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஜனவரி 17)வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கிவைக்கிறார். இந்த ரயில்கள் ஒற்றுமை சிலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான ஒற்றுமை சிலைக்கு, சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதற்கான நடவடிக்கையின் முதல்கட்டமாக கேவடியாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மின்சார ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த புதிய ரயில் சேவைகளை டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஜன.17) தொடங்கிவைக்கிறார்.
இந்த நிகழ்வின்போது குஜராத்தில் ரயில்வே துறை தொடர்பான பல திட்டங்களையும் பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர், ரயில்வேத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
அப்போது, தபோய் - சந்தோட் கேஜ் மாற்றப்பட்ட பிராட் கேஜ் ரயில் பாதை, சந்தோட் - கேவடியா புதிய பிராட் கேஜ் ரயில் பாதை, புதிதாக மின்மயமாக்கப்பட்ட பிரதாப் நகர் - கேவடியா பிரிவு மற்றும் தபோய், சந்தோட் மற்றும் கேவடியாவின் புதிய நிலைய கட்டடங்கள் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
இந்த கட்டடங்கள் நவீன பயணிகள் வசதிகளை உள்ளடக்கிய வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பசுமை கட்டட சான்றிதழ் கொண்ட இந்தியாவின் முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை கேவடியா ரயில் நிலையம் பெற்றுள்ளது.