புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக முதலியார்பேட்டை ஏஎப்டி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டணி கட்சியான என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி, பாஜக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
இதில் பேசிய பிரதமர் மோடி, புதுச்சேரி ஒரு பெரிய மாற்றத்திற்காக காத்திருக்கிறது. விரைவில் அந்த மாற்றம் நிகழும். இந்தியாவில் மருத்துவம், தொழில்நுட்ப கல்வியை அவரவர் தாய்மொழியிலேயே கற்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
புதுச்சேரியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 6,000 வீடுகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன. புதுச்சேரியை விளையாட்டு கல்வி மையமாக உருவாக்க உள்ளோம். அதேபோல் புதிதாக 2 மீன்பிடி கிராமங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
புதுச்சேரியில் மீன்வளத்துறை மூலம் மினவர் நலத்தை பெருக்க நீல பொருளாதாரம் திட்டம் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடல் சார்ந்த பொருளாதாரம் மேம்படுத்தப்படும். புதுச்சேரியில் உள் கட்டமைப்பை மேம்படுத்த 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியால் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர், இதுவரை சந்தித்த தேர்தல்களில் புதுச்சேரி தேர்தல் புதுமையானது. ஏனெனில் கடந்தகால காங்கிரஸ் ஆட்சி மோசமானதாக இருந்ததால் அக்கட்சி முதல்வருக்கே தற்போது தேர்தலில் சீட் வழங்கவில்லை என்றார்.