டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி போர்த்துகீசிய பிரதமர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா உடன் செவ்வாய்க்கிழமை (மார்ச் 16) தொலைபேசியில் பேசினர். அப்போது வருகிற மே மாதம் நடைபெறவிருக்கும் முதல் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அவர்கள் மதிப்பாய்வு செய்தனர்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், “இரு நாட்டு தலைவர்களும் தங்கள் நாடுகளில் உள்ள கோவிட்-19 நிலைமையை மறுஆய்வு செய்தனர். அத்தோடு, தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தடுப்பூசிகளை விரைவாகவும் சமமாகவும் விநியோகிப்பதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து இந்திய நாட்டின் தடுப்பூசி இதுவரை 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது குறித்து மோடி விளக்கினார். மேலும், மற்ற நாடுகளின் தடுப்பூசி முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், “கடந்த சில ஆண்டுகளாக இந்தியா- போர்ச்சுக்கல் நாடுகளுக்கிடையேயான உறவு சுமூகமான சரியான பாதையில் பயணிக்கின்றன” என்று இருநாட்டு தலைவர்களும் கூறினர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.