மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சர் பி.சி. ஷர்மாவின் இல்லத் திருமண நிகழ்வு சிந்த்வாராவில் நேற்று (டிச.10) நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திக்விஜய் சிங் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், “ பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அகில இந்திய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி இடையே மறைமுக கூட்டணி தொடர்கிறது. நாட்டில் வெறுப்புணர்வை பரப்புவதற்கு அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.
இந்த நாட்டில் நிலவிவரும் வேலையின்மை பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவந்தாலோ, வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தினாலோ 'லவ் ஜிஹாத்' மசோதா குறித்து நாங்கள் கவலைப்பட மாட்டோம். நாட்டின் மத நல்லிணக்கம் செழுமையுற்று, அனைத்து சமூதாய மக்களும் மிகவும் இணக்கமான சூழலில் வாழும் நிலையை 'லவ் ஜிஹாத்' மசோதா ஏற்படுத்துமானால் அதனை நாம் கண்கொள்ளத் தேவையே இல்லை.
ஆனால், ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரமும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்த சூழலில், பாஜக அரசின் நிர்வாக சீர்கேட்டை மூடிமறைக்க, அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள படுதோல்வியை திசைத் திருப்ப பிரதமர் நரேந்திர மோடி, லவ் ஜிஹாத் என பேசி இந்து இஸ்லாமியர் இடையே பிரச்னையை உருவாக்க முயல்கிறார்.
இந்து அடிப்படைவாத ஆற்றல்களும், இஸ்லாமிய அடிப்படைவாத ஆற்றல்களும் ஒன்றிணைந்து நாட்டில் வெறுப்பை பரப்புகின்றன.
அகில இந்திய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பியுமான அசாதுதின் ஓவைசி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உணர்ச்சிகரமான உரை வீச்சுகளை மேற்கொள்கிறார். அதன் மூலமாக இஸ்லாமியர்களை ஆத்திரமூட்டுகிறார். அவரது உரைகள் இந்துத்துவ அமைப்புகளின் வேலையை எளிதாக்குகிறது. இவ்வாறு மோடியின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற ஓவைசி உதவுகிறார். இருவருக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டத்தை, இந்து இஸ்லாமியர் பிரச்னைகளை தோற்றுவித்து திசைத்திருப்ப பாஜக 'லவ் ஜிஹாத்' மசோதாவை கையில் எடுத்துள்ளது”என்றார்.
இதையும் படிங்க : அமலாக்கத் துறை முன் ஆஜரான சிவசேனா எம்எல்ஏ