சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத், பிரதமர் மோடி தான் இந்தியாவின் முன்னணி ('டாப்) தலைவர் எனத் தெரிவித்துள்ளார். அன்மையில் நடந்து முடிந்த பல சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்தித்தது.
மோடிதான் டாப் தலைவர்
இந்தத் தோல்வி பிரதமர் மோடியின் புகழ் குறைவதைக் காட்டுகிறதா என நிருபர்கள் சஞ்சய் ராவத்திடம் முன்னதாகக் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், ”ஊடகங்கள் கூறுவதை எல்லாம் நான் ஏற்பதில்லை. கடந்த ஏழு ஆண்டு கால பாஜக கண்ட வெற்றியின் பெருமை பிரதமர் மோடியையே சாரும்.
இப்போதும் நாட்டிற்கும் பாஜகவிற்கும் டாப் தலைவர் மோடிதான். என்னைப் பொருத்தவரை பிரதமர் மோடி நாட்டிற்கு பொதுவானவர். அவர் இது போன்று தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடக்கூடாது” என்றார்.
அண்மையில் மகாராஷ்டிரா முதலமைச்சரும் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே, மராத்தா இட ஒதுக்கீடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியை டெல்லிக்குச் சென்று சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாவிகாஸ் அகதி என்ற கூட்டணியை அமைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பாதித்த மாமனாரை தோளில் சுமந்து சென்ற பெண்ணுக்கும் கரோனா!