இம்பால்: மணிப்பூரில் இணையதள சேவை முடக்கம் நவம்பர் 8ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மணிப்பூர் ரைபிள் ஆயுதக் களஞ்சியத்தை மர்ம கும்பல் தக்கியதை அடுத்து மாநிலம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவியது.
இதனையடுத்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு பொது மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் சமூக விரோதிகள் சிலர் படங்கள், வெறுப்பூட்டும் பேச்சுகள் மற்றும் வீடியோ போன்றவற்றைப் பரப்புவதற்கு சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தைத் தொடர்ந்து இணையதள தடை அமல்படுத்தப்பட்டது என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து அம்மாநில உள்துறை ஆணையர் ரஞ்சித் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த செவ்வாயன்று மோரே நகரில் மர்ம நபர்களால் காவல் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. இதனையடுத்து பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக இணையதள சேவை முடக்கப்பட்டது. மேலும் வன்முறையால் பாதிக்கப்படாத மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இணையதள சேவை வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார். கடந்த சில நாள்களுக்கு முன்னர் பொதுக்கூட்டத்தில் ஒன்றில் பேசிய அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங், "இணைய சேவை இல்லாமல் மக்கள் சந்தித்துவரும் அவதியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சில சக்திகள் சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பிரச்சினைகளை உருவாக்குவதால் இணைய சேவையைத் தடை செய்யும் நிர்பந்தத்துக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும் இன்னும் சில நாட்களில் இணைய சேவை திரும்பக் கிடைக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
அண்மையில் மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து மாநிலத்தில் இணைய சேவை முடக்கப்பட்டது. நீண்ட நாட்களாக இருந்த இந்த முடக்கம் அண்மையில் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் இணைய சேவை முடக்கம் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கேரள மதவழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு சம்பவம்: பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு!