புதுக்கோட்டை திமுக ராஜ்யசபா எம்.பி.,யான எம்.எம்., அப்துல்லா இன்று நாடாளுமன்றத்தில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் H.H.ராஜா ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் பகதூருக்கு ஒன்றிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவிக்க கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர், “புதுக்கோட்டை சமஸ்தானமானது 1680 முதல் 1948 வரை இருந்த அரச மாகாணம். சுதந்திரத்திற்குப் பிறகு, 1948ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதியன்று இந்திய ஒன்றியத்துடன் சேருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் சமஸ்தானமும் இதுவேயாகும். தற்போதைய தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பகுதிதான் இது.
H.H. ராஜா ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் பகதூர் தான் இந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவதாகவும், கடைசியாகவும் முடிசூட்டப்பட்ட மன்னர் ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடனே தனது நாட்டை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள அவர் தீர்மானித்தார். தனது மொத்த கருவூலத் தொகையுடன் சுதந்திர இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் முழு மனதுடன் கையெழுத்திட்ட முதல் மன்னரும் இவரே.
அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் கூட H.H. ராஜா ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் அவர்களால் தான் இந்தியாவுடன் சமஸ்தானங்களை இணைக்கமுடியும் என்னும் நம்பிக்கையைப் பெற்றார். மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோளின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் செயல்பாட்டிற்காக தன்னலமின்றி தனது அரச மாளிகையை வழங்கியவர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், கொடைக்கானல் படகு மற்றும் ரோயிங் கிளப் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியவர். 1935ஆம் ஆண்டு ஜார்ஜ் V வெள்ளி விழா பதக்கம், 1937ஆம் ஆண்டு ஜார்ஜ் VI முடிசூட்டு விழா நினைவுப் பதக்கம் ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்டவர். தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில், மக்களுக்குச் சேவை செய்ய திருமணத்தைத் தவிர்த்துவிட்டு, துறவியைப் போல வாழ்ந்து வந்தார். 1997ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தனது 74-வது வயதில் காலமானார்.
எனவே, புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னர் H.H. ராஜா ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் பகதூரின் நூற்றாண்டு நினைவை முன்னிட்டு நமது தேசத்தின் ஒற்றுமைக்காக அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசு அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இவரது கோரிக்கை புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே மிகுந்த பாராட்டுதலையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பிப்.14 இனி காதலர் தினம் இல்லையாம் 'COW HUG DAY' வாம்!