பெங்களூரு: கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடக்க உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்த நாள் முதல் அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், 9வது முறையாக தேர்தலில் காங்கிரஸின் வேட்பாளராக ஆர்.வி.தேஷ்பாண்டே அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.வி.தேஷ்பாண்டே: மூத்த காங்கிரஸ் தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே 8 முறை எம்.எல்.ஏவாக வென்றுள்ளார். வரும் மே 10ஆம் தேதி நடக்க உள்ள கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 10வது முறையாக போட்டியிடுகிறார். இவர் 1983 முதல் 1994 வரை ஜனதா பரிவார் (JP) சார்பில் போட்டியிட்டு 4 முறை எம்எல்ஏ-வாக இருந்தார். பின்னர், 1999-ல் காங்கிரஸில் இணைந்து 2004, 2013 மற்றும் 2018 தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தார். இதனிடையே, 2008-ல் மட்டும் சுனில் ஹெக்டேவிடம் ஒரு முறை மட்டுமே தோல்வியடைந்தார். இவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்குப் பிறகு, சீனியரான தலைவராகப் பார்க்கப்படுகிறார்.
சித்தராமையா: கர்நாடக அரசியலில் மிக முக்கிய தலைவராக கருதப்படும் காங்கிரஸ் தலைவரான சித்தராமையா, மே 13, 2013 முதல் 2018, மே 17 வரை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். இதுவரையில் 10 முறை போட்டியிட்ட இவர், இடைத்தேர்தல் உட்பட 8 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக, இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிவ பசப்பாவை 250 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர், நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 9வது முறையாக போட்டியிடுகிறார்.
டி.கே.சிவக்குமார்: கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான டி.கே.சிவக்குமார், இதுவரையில் 7 முறை தேர்தலில் வெற்றி பெற்றார். இவர், 1999 தேர்தலில் முன்னாள் முதலமைச்சரான குமாரசாமியை எதிர்த்து 56 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றதோடு, 2008 முதல் கனகபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். இந்த நிலையில், 8-வது முறையாக இவர் நடக்க உள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 8-வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.ஆர்.ரமேஷ்குமார்: முன்னாள் சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான கே.ஆர்.ரமேஷ்குமார், 7வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் 1985, 1994 ஆண்டில் நடந்த தேர்தலில் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர், காங்கிரஸில் இருந்துகொண்டு கடந்த 2004 முதல் தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறார்.
இவ்வாறு மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக மற்றும் ஆட்சியை பிடிப்பதில் முனைப்பு காட்டிவரும் காங்கிரஸ் உள்ளிட்ட பலதரப்பட்ட கட்சிகள் களத்தில் உள்ளதால் நடக்க உள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 2023 அம்மாநில அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: Karnataka Election 2023 : நட்சத்திர வேட்பாளர்கள் மீதான வழக்கு பட்டியல் வெளியீடு!