மும்பை: மசூதிகளில் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் ஒவ்வொரு மசூதி முன்பும் ஹனுமன் சாலிஸா பாடப்படும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையில், அமராவதி தொகுதி சுயேச்சை எம்பியும் நடிகர் கருணாஸ் நடித்திருந்த அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் கதாநாயகியுமான நவநீத் ராணா மற்றும் அவரது கணவர் எம்எல்ஏ ரவி ராணா ஆகியோர் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இல்லம் முன்பு ஹனுமன் சாலிஸா பாடப்போவதாக அறிவித்தனர்.
இது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் ஏப்.23ஆம் தேதி நவ்நீத் கவூர் மற்றும் அவரது கணவர் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கலகம் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இவர்களுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சிறையில் தாங்கள் பட்டியலினம் என்பதால் அவமதிக்கப்பட்டதாக ராணா தம்பதியர் புகார் அளித்தனர்.
மேலும் தங்களுக்கு பிணை வேண்டும் என்று மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராணா தம்பதியருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார். இந்த பிணை உத்தரவில் சில நிபந்தனைகளையும் நீதிபதி விதித்துள்ளார். நவ்நீத் கவுர் மும்பை பைகுலா சிறையில் இருந்தும் அவரது கணவர் ரவி ராணா தலோஜா சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு!