கட்டாக்: ஒடிஷா மாநிலம் பூரி மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ராஜஶ்ரீ ஸ்வைன்(26), புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்காக பஜ்ரகபட்டி பகுதியில் ஒடிஷா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருந்தார். ராஜஶ்ரீ உள்பட பயிற்சியில் கலந்து கொண்ட சுமார் 25 கிரிக்கெட் வீராங்கனைகள் அப்பகுதியில் இருந்த ஹோட்டலில் தங்கியிருந்ததாக தெரிகிறது.
கடந்த 11ஆம் தேதி போட்டிக்கான கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. 16 பேர் கொண்ட அந்த அணியில் ராஜஶ்ரீயின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ராஜஶ்ரீ மனமுடைந்திருந்ததாக தெரிகிறது. வீராங்கனைகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்ற ராஜஶ்ரீயை பிறகு காணவில்லை. இதையடுத்து பயிற்சியாளர் புஷ்பாஞ்சலி பானர்ஜி போலீசில் புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று(ஜன.13) கட்டாக் அருகே உள்ள அடந்த வனப்பகுதியில் இருந்து ராஜஶ்ரீ ஸ்வைன் சடலமாக மீட்கப்பட்டார். வனப்பகுதியிலிருந்து அவரது இருசக்கர வாகனத்தையும் மீட்டனர். சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூராய்வுக்குப் பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் குறிப்பிட்டனர்.
ராஜஶ்ரீயின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர். அணியில் இடம்பெற்ற பலரை விட ராஜஶ்ரீ சிறப்பாக விளையாடிய போதும், அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டினர். ராஜஶ்ரீயின் பெற்றோர், ஒடிஷா கிரிக்கெட் சங்கம் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் புஷ்பாஞ்சலி பானர்ஜி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை ஒடிஷா கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது.
இதையும் படிங்க: தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு