டெல்லி: தயால்பூர் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில், கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் கணவரை, நேற்றி (செப். 25) அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், அடையாளம் தெரியாத நபர்களைப் பிடிப்பதற்காகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் இது குறித்து அவர் கூறியதாவது, “நாங்கள் சவுகான் பகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளோம். நேற்று (செப். 25) இரவு நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று சிலர் கதவைத் தட்டினார்கள்.
அதைப் பார்க்கச் சென்ற என் கணவரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுவிட்டு தப்பியோடினர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் எனது கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் முன்னதாகவே எனது கணவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திரும்பப் பெறக்கோரி மிரட்டல்
நாங்கள் முன்னதாக காசியாபாத்தின் லோனி பகுதியில் வாழ்ந்துவந்தோம். ஆனால் ஹோலி சமயத்தில் குட்டு, மெராஜ், வாசி, தாம்ஜீத் உள்பட பலரால் நான் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குத் தள்ளப்பட்டேன். இதையடுத்து, ட்ரோனிகா நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
இந்த வழக்கில் தாம்ஜீத் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ளவர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர். இந்த வழக்கைத் திரும்பப் பெறக்கோரி பல மிரட்டல்கள் வந்தன.
இந்நிலையில் சமீபகாலத்தில் நாங்கள் வீடு மாறினோம். வீடு மாறிய பிறகும் வழக்கைத் திரும்பப் பெறுமாறு பல மிரட்டல்கள் வந்தன. கண்டிப்பாக எனது கணவர் கொலைக்கு காசியாபாத், அங்கூர் நகரைச் சேர்ந்த மணீஷ் பவன் பண்டிட், டாட்டூ என்பவர்கள்தான் காரணம். அவர்களைக் கைது செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.