பரிதாபாத் : அரியானா மாநிலம் பரிதாபாத் அடுத்த டிகோன் குடியிருப்பு பகுதியில் ஒரு கோயிலில் திருமண நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது. பட்டியலின மணமகன் குதிரையின் மீது அமர்ந்தவாறு திருமண சடங்குகளில் ஈடுபட்டு உள்ளார். அப்போது கூட்டத்தில் நுழைந்த நபர் திருமண சடங்குகளை நிறுத்தி, மணமகனிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென அந்த நபர் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து மணமகனை நோக்கி சுடத் தொடங்கி உள்ளார். இதில், திருமண நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த பெண்ணின் காலில் துபாக்கி குண்டு பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. படுகாயம் அடைந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என்றும் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவான நபர் மீது வழக்குப் பதிவு செய்து வலைவீசு தேடி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், திருமண நிகழ்வில் நுழைந்து குதிரையில் அமர்ந்து இருந்த பட்டியலின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : "100 நாட்களில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்" - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி!