லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் நகரிலுள்ள முதன்மை சுகாதார நிலையங்களில் மோசமான சுகாதார கட்டமைப்பு காரணமாக, நோயாளிகளை மரத்தின் அடியில் படுக்க வைக்க மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக, அந்நகர மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மிர்சாபூர் அருகே உள்ள ஹர்சத் எனும் கிராமத்தைச் சேர்ந்த சிவ்சங்கர் என்பவர், தனது மனைவி விஷம் அருந்திவிட்டதாக கூறி அருகாமையிலுள்ள முதன்மை சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த சுகாதாரா நிலையத்தின் செவிலியர் ஒருவர் சிவ்சங்கரின் மனைவியை மரத்தின் அடியில் படுக்கவைத்து, இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சிகிச்சை அளித்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிவ்சங்கர், அவரது உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரது மனைவி மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாக முதன்மை சுகாதார நிலையத்தில் மரத்திற்கு கீழே வைத்துதான் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய சிவ்சங்கர்,"இங்கு சுகாதார வசதி மிகவும் மோசமடைந்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் இதுபோன்று போராட்டம் நடத்திவிட்டோம். ஆனால் தங்களது மனக்குறைகளைக் கேட்க மருத்துவமனை நிர்வாகமோ, அமைச்சரோ வரவில்லை" என்றார்.
இது தொடர்பாக முதன்மை சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவ அலுவலர் அபிஷேக் ஜெய்ஷ்வால் கூறுகையில், "நோயாளி விஷம் அருந்தியிருந்ததால், வாந்தி எடுக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே அவர் மரத்திற்கு அடியில் அழைத்துச் செல்லப்பட்டார்" என விளக்கம் அளித்தார்.
உத்தரப் பிரதேசத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதி இல்லை என்பதே இங்குள்ள மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் உறுப்பினராக ஆஷா குமாரி நியமனம்