லதேஹர்: ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹரில் நேற்றிரவு(அக்.7) சிறுமி ஒருவர் இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். சிறுமிக்கு அருகே இளைஞர் ஒருவரும் அமர்ந்திருந்தார்.
அப்போது சுமார் 10 சிறுவர்கள் மது போதையில் ரயில் நிலையத்திற்கு சென்று, சிறுமியிடமும் இளைஞரிடமும் பிரச்சினை செய்துள்ளனர். இளைஞர் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர்கள் இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் இந்த இளைஞர் குடிகாரர்களிடமிருந்து தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து மதுபோதையில் இருந்த சிறுவர்கள், சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் தகவல் தெரிந்ததும், சிலர் மத்தியஸ்தம் செய்து பிரச்சினையை பேசி தீர்க்க முயன்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று 10 சிறுவர்களையும் கைது செய்தனர். பின்னர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.