உத்தரகாண்ட் : இந்தியா - சீனா எல்லையில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் 51 கிராமங்களில் மத்திய உள்துறை அமைச்சகம் மக்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில், விரைவில் அங்கு வசிக்கும் மக்களுக்கு ஆதார் கார்டு விநியோகிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூரில் பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, சீன எல்லையை ஒட்டிய கிராமங்களில் அதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இந்த கணக்கெடுப்பின் மூலம் உத்தரகாண்ட மாநிலம் அல்லாதவர்களின் ஊடுருவல் குறித்த தகவல் வெட்டவெளிச்சத்திற்கு வரும் எனக் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் உத்தரகாண்டின் 51 கிராமங்களில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எல்லையில் உள்ள கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக விரிவான மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த கணக்கெடுப்புப் பணியில் காவல் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பு கிராமங்களில் பாதுகாப்பு பிரச்னைகள் சரிபார்த்த பின்னரே ஆதார் அட்டை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக எல்லை மாவட்டத்தில் உள்ள ஆதார் அட்டை மையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா - சீனா எல்லையோரப் பகுதிகளில் உள்ள மக்களிடம் ஆதார் அட்டை இல்லை என்றும், தங்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களின் விவரங்களை ஆய்வு செய்து சரிபார்க்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எல்லை பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, கடுமையான வழிகாட்டுதல்களின்படி மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் அதன் அடிப்படையில் ஆதார் அட்டைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : கேரளாவில் மீண்டும் செல்போன் விபத்து - ரியல்மி செல்போன் பேட்டரி வெடித்து இளைஞர் காயம்!