புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதால், அதனை தனியார்மயமாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களும் இன்று (டிச.28) முதல் வேலை நிறுத்தம் அறிவித்தன. இதையடுத்து போக்குவரத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் தொழிற்சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட்டன.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் ,”புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம், அரசு பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்ப்பதாக வெளியான தகவல் தவறானது.
அரசுக்கு அவ்வாறான எண்ணமில்லை என்பது தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. தனியார்மயமாக்கப்படாது என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொழிற்சங்கங்கள் போராட்டங்களை வாபஸ் பெறுவதற்காக அந்தச் சங்கங்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.
நாளையும் (டிச.28) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் காரணத்தால் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறபட்டுள்ளது எனத் தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஒப்பந்த தொழிலாளர் போராட்டம் காரணமாக நகரப்பகுதியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அதிகார துஷ்பிரயோகம் செய்யும் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு