தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள 16 இடங்களில் நேற்று(அக்.12) அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை போன நான்கு பேரை கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை தொடர்பாக என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்ள லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹுதீன் உள்ளிட்ட பல அமைப்புகள் திட்டம் தீட்டிவருகின்றன.
இந்த சதித்திட்டத்திற்கு துணை போன வாசீம் அகமது, தாரீக் அகமது, பிலால் அகமது, அகமது பஃபந்தா என்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தொடர் விசாரணையை அமைப்பு மேற்கொண்டுவருகிறது.
இவர்களுக்கு வெளிநாட்டு சக்திகளின் உதவி கிடைத்துவருவது விசாரணையில் தெரியவருகிறது. புலனாய்வு அமைப்புகள் தொடர் விசாரணையில் ஈடுபடவுள்ளோம் எனக் கூறியுள்ளது.
கடந்த சில நாள்களாக ஜம்மு காஷ்மீரில் சீக்கியர்கள், இந்துக்கள் போன்ற சிறுபான்மை மக்கள் குறிவைத்து கொல்லப்படும் சம்பவம் அரங்கேறிவருகிறது. இதையடுத்து அங்கு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சாவர்கர் மன்னிப்பு விவகாரம்' விவாதப்பொருளாக மாறியுள்ள ராஜ்நாத் சிங் கருத்து